குஜராத்தில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன், புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரிக்கு தனி துணைநிலை ஆளுநர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு ஆளுநர்களே நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், குஜராத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மூ பிறப்பித்துள்ளார். 1953-ல் பிறந்த கைலாசநாதன், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. வேதியியல், வேல்ஸ் பல்கலை.யில் எம்.ஏ. பொருளாதாரம் பயின்றவர். இவரது தந்தை உதகமண்டலத்தில் அஞ்சல் துறையில் பணிபுரிந்ததால், கைலாசநாதன் உதகையில் வளர்ந்தார். 1979 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியான கைலாசநாதன், குஜராத்தில் 1981-ல் உதவி ஆட்சியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, அம்மாநில முதன்மை தலைமைச் செயலராகப் பணிபுரிந்தார். 45 ஆண்டுகள் குஜராத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்து, தற்போதும் மோடிக்கு நெருக்கமானவராக இருந்து வருகிறார். புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் வருகிற 31-ம் தேதி கூடுகிறது. பட்ஜெட் உரையை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாசிக்க உள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கைலாசநாதன் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed.