திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காந்திநகரில் வசித்து வருபவர் ஜலாலுதீன் (52). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தாஹிராபானு(48). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் திண்டுக்கல் பகுதியில் தங்கி படித்து வருகிறார். ஒரு மகள் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். மற்றொரு மகள் மண்ணச்சநல்லூரில் படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் உறவினர் இல்ல திருமணத்திற்காக தாஹிராபானு துறையூர் சென்று இருந்தார். 2 நாட்கள் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பீரோக்களையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று(29-07-2024) காலை வீடு திரும்பிய தாஹிராபானு வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மூன்று பீரோவில் இருந்த 23 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், 57ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரகுமான், உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ்ஜெகன், தலைமை காவலர் மகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் மூலமும் துப்பு துவக்கப்பட்டது. ஆனால், அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.