நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தோற்றால் அந்த மாவட்ட செயலாளர் பதவி நீக்கம்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
வருகிற நாடாளுமன்றத் தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி அவர்களுக்கு தகுந்த ஆலோசனை கூறி வருகிறார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(1-10-2023) தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் காணொளி வாயிலாக பங்கேற்றனர். 72 மாவட்ட செயலாளர்களும், 234 தொகுதி பார்வையாளர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் தான் உள்ளது. இந்த தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். இதற்காக திமுக அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த பட்டியலை ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் சரி பார்க்க வேண்டும். அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். எந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தோல்வி அடைகிறாரோ அந்த தொகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார். தேர்தல் பணியில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று பேசினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.