பணிக் காலத்தில் இறக்கும் அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தநிலையில், கருணை அடிப்படையில் மற்ற துறைகளில் வாரிசுதாரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படுவது போல, மருத்துவத் துறையிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஊழியர்கள் இறந்த 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்தால் அரசுப் பணி வழங்கப்படும். இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் என்ற மூன்று பணிகளில் ஒரு பணியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் பணிக்கு அதிகமான காலியிடங்கள் இல்லாத பட்சத்தில் அந்த பணிக்கு காத்திருக்க வேண்டிய சூழல் வரும். இதற்கு ஒரு எளிதான வழியை அரசின் சார்பில் அறிவிக்கிறோம். இளநிலை உதவியாளர் பணியிடமும், தட்டச்சர் பணியிடமும் ஒரே ஊதிய அளவுள்ளவை தான். எனவே, இளநிலை உதவியாளர் பணி வேண்டி விண்ணப்பிப்பவர்கள் காத்திருந்து அப்பணியை பெற்று கொள்வதை காட்டிலும், 6 மாத காலம் தட்டச்சர் பயிற்சி பெற்று விண்ணப்பித்தால் தட்டச்சர் பணிக்கான ஆணைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.