கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் விவசாய சங்க நிர்வாகிகளோடு இணைந்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் உரிய இழப்பீடு கிடைக்கச்செய்யும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்திலும், காப்பீடு கொள்கையிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும். பருவ கால மாற்றத்தால் ஏற்படும் பேரழிவு, பெருமழை மற்றும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் டல்லேவால் 53- வது நாளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 22ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளனர். அன்றைய தினம் விவசாயிகள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் பேரணி நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளோம்.
தமிழக அரசு நிதிச்சுமையை காரணம் காட்டி, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மணிகளை கொள்முதல் செய்யுமா? செய்யாதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை தனியாரிடம் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. டங்ஸ்டன் தொழிற்சாலைக்கு எதிராக திமுக அரசு சட்டமன்றத்தில் எழுத்து பூர்வமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி, அதனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க ஏதுவாக நில ஒருங்கிணைப்பு சட்டம் – 2024 கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் இந்த போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம் என்றனர்.
Comments are closed.