உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனை பச்சைமலை பகுதிகளில் வாழும் மலைவாழ் பெண்கள் 50 பேருக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகளை இலவசமாக வழங்கியது. இன்று (ஜூன் 5) நடைபெற்ற நிகழ்ச்சியில் தேனீ வளர்ப்பு பெட்டிகளை திருச்சி காவேரி மருத்துவமனையின் இயக்குனர் அன்புச்செழியன் பயனாளிகளுக்கு வழங்கினார். பச்சைமலையில் உள்ள மணலோடை, தோணுர், சின்ன இலுப்பூர், பெரிய இலுப்பூர், குறிச்சி ஆகிய கிராமங்களில் வசித்து வரும் மக்கள் இயற்கையை பேணும் வகையில் தேனீ வளர்ப்பில் ஈடுபடும் வாய்ப்பையும், அதே சமயம் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்குவதே மருத்துவமனையின் நோக்கம். இதுகுறித்து அன்புச்செழியன் கூறுகையில், “பச்சைமலை பகுதிகளின் இயற்கையை பாதுகாக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மேலும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் எங்கள் மருத்துவமனை ஆர்வமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக உலக சுற்றுச்சூழல் தினத்தில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கும் பணியை தொடங்கியுள்ளோம். பச்சைமலையில் வசிக்கும் மலைவாழ் பெண்கள் தங்களின் பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள தேனீ வளர்ப்பு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்.

Comments are closed.