தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் இந்த திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன் பெறும் வகையில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என த.வெ.க அரசு அறிவித்திருந்தது.
விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய், இன்று(22-09-2026) தொடங்கி வைத்தார். சென்னை, திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிய விஜய் அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். முதல் நாள் காலை உணவுத்திட்டத்தில் சாம்பார், வெண்பொங்கல், சர்க்கைப் பொங்கல் ஆகிய உணவுகள் பரிமாறப்பட்டன. ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுவரும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ரவா உப்புமா கிச்சடி, சேமியா உப்புமா, சேமியா காய்கறி கிச்சடி, காய்கறி அரிசி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் சாதம், இனிப்பு பொங்கல், சேமியா கேசரி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவு வகைகளைச் சோ்க்க தமிழக அரசின் சார்பில் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

Comments are closed.