திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் -அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகன்கள் உள்ளனர். ஜோதிடம் பார்த்து வரும் ராஜேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு ராஜேஷ் வழக்கம்போல மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து மனைவி அனுசியாவை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில், படுகாயமடைந்த அனுசியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கார் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் முத்தையன், உதவி ஆய்வாளர் லோகேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கணவனை வலைவீசி தேடி வருகின்றனர்
Comments are closed.