தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு, மேற்கு, ஶ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 தொகுதிகளிலும் மொத்தம் 21,47,051 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 2,787 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை கண்காணிக்கவும், அசம்பாவிதங்களைதடுக்கவும் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், ஊா்க்காவல் படையினா், துணை ராணுவப் படையினா், மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையினா், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் என தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 7906 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3541 கட்டுப்பாட்டு கருவிகளும், 3810 விவி பேட் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் கருவிகள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில், அந்தந்த தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Comments are closed.