தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. மேலும், தீபாவளி பண்டிகையின்போது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் 30% சிறப்புத்தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(01-10-2024) குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு(2023) தீபாவளி பண்டிகையின்போது ரூ.1 கோடியே 93 லட்சத்துக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.2 கோடியே 35 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, மின் வணிக விற்பனையும் நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப ஜவுளி ரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் சரவணன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, சேர்மன் துரைராஜ், கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், கலைச்செல்வி, புஷ்பராஜ், ராமதாஸ், விஜயா ஜெயராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், காஜாமலை விஜய், பகுதிச் செயலாளர்கள் மோகன்தாஸ், நாகராஜன் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர், விற்பனை மேலாளர் சங்கர், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.