திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி: நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்…!
2 அமைச்சர்கள் பங்கேற்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தேர்தலில் வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மு.மதிவாணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் கவுன்சிலர் பைஸ் அகமது, முகமது ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், டி.டி.சி. சேரன், மதிமுக நிர்வாகிகள் எஸ்.ஆர்.செந்தில், ராஜன் இளமுருகு, கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார், ஆசிரியர் முருகன், ஏர்போர்ட் வினோத், செல்லத்துரை மற்றும் தி.மு.க, மதிமுக, விசிக, ம.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், திமுக எப்போதும் யாரையும் விட்டுக்கொடுக்காது. தி.மு.க கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற வைப்போம். எல்.கணேசன் மதிமுக சார்பில் போட்டியிட்ட போது அவரை வெற்றி பெற செய்தோம். அவர் எப்போதும் திமுக வை விட்டு கொடுக்க மாட்டார். அதேபோல அவர் வழியில் துரை வைகோவும் செயல்பட்டு தி.மு.க கூட்டணி கட்சியினருக்கும், திருச்சி தொகுதி மக்களுக்காகவும் உழைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் ஒரே மாதிரியாக பார்த்து அந்த அந்த தொகுதிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். தீப்பெட்டி சின்னம் போல் இருந்த பிஸ்கெட் சின்னத்திற்கு 14 ஆயிரம் வாக்குகள் சென்றது அதுவும் தீப்பெட்டி சின்னத்திற்கு தான் வந்திருக்க வேண்டும் என்றார்.
முடிவில்எம்.பி துரை.வைகோ அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசுகையில், தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திருச்சி மக்களின் குரலாக, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் குரலாக, விளிம்பு நிலை மக்களின் குரலாக ஒலிப்பேன். சமூக நீதியையும், மதச்சார்பினையும் பாதுகாப்பேன் என்றார். இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.