இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக தனிப் பெரும்பான்மையை பெறாத நிலையிலும், தனது தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோத்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பாஜகவுக்கு உருவாகியுள்ளது. அதேநேரம், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் வெற்றிபெற்று நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது. அதிபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, இந்த முறை 37 தொகுதிகளில் வென்றுள்ளது இந்த தேர்தலில் திருப்புமுனையான விஷயம். கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த முறை பாஜக வென்றுள்ள இடங்களில் கூட குறைந்த வாக்கு வித்தியாசம்தான் உள்ளது. இந்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் இன்று (புதன்கிழமை) மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சாமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுடெல்லி செல்கிறார் இந்த கூட்டத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed.