திருப்பத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில் திருப்பம்… மனுவை திரும்பப் பெற்றார் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன்!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதையடுத்து, திருப்பத்தூர் (சிவகங்கை) சட்டமன்றத் தொகுதிக்குச் செல்ல வேண்டிய தபால் வாக்குகள், திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) சட்டமன்றத் தொகுதிக்கு தவறுதலாக அனுப்பப்பட்டதாகக் கூறி, பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி பங்கேற்று வாக்களிக்க இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் வழக்கு விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கிடையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரியகருப்பன் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்கிய நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சட்டப்படி விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் தெரிவித்தது. மேலும், முன்பு வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் நீக்கியது. இந்த நிலையில், தொகுதி மாறி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் தபால் வாக்குகளை மீட்டு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை பெரியகருப்பன் திரும்பப் பெற்றுள்ளார். இதற்கிடையில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் தேர்தல் வெற்றியை செல்லாததாக அறிவிக்கக் கோரி தனியாக தேர்தல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், முந்தைய மனுவை பெரியகருப்பன் திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.