‘மன்னர் வகையறா’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக பைனான்சியர் கோபியிடம் ரூ.4.5 கோடி கடன் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில், நடிகர் விமலுக்கு சென்னை 11-வது சிறு வழக்குகள் நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. படம் வெளியான பிறகும் கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், விமல் வழங்கிய ரூ.4.5 கோடி மதிப்புள்ள காசோலை, வங்கியில் பணம் இல்லாத காரணத்தால் திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பைனான்சியர் கோபி, நடிகர் விமலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், விமல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்ததுடன், நிலுவைத் தொகையையும் செலுத்த உத்தரவிட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நடிகர் விமல், மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்து, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கி, தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

Comments are closed.