Rock Fort Times
Online News

“நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க வேண்டிய நேரம் இது”… மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், டெல்லியில் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க வேண்டிய நேரம் இது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “மாணவர்களின் சுமையைக் குறைத்தல், கல்வியின் வணிகமயமாக்கலை ஒழித்தல் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய வாக்குறுதிகளுடன் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த மூன்று அம்சங்களிலும் நீட் தேர்வு தோல்வியடைந்துள்ளது. நீட் தேர்வு, கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றியுள்ளது. நீட் தேர்வின் பிரச்சினை நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல; அது கட்டமைப்பு ரீதியான பிரச்சினையாகும். சமீபத்திய நிகழ்வுகள் இதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. டெல்லியில் நடைபெறும் போராட்டங்களுக்குப் பிறகாவது மத்திய அரசு விழிப்படைய வேண்டும். நீட் விவகாரத்தில் திறந்த மனதுடன் ஆலோசனைகளை நடத்த வேண்டும். இந்தியாவில் அதிகாரக் குவிப்பு தேவையில்லை. மாறாக, மாநிலங்கள், அவற்றின் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க வேண்டிய நேரம் இது.” இவ்வாறு மு.க. ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்