Rock Fort Times
Online News

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்…* பிரதமர் மோடி உறுதி!

நீட் மற்றும் பிற தகுதித் தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி பெரும் கவனம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்ததால், இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வினாத்தாள் கசிவு சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான எங்களின் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்களை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம்” என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்