“உங்கள் கனவுகள் எப்போதும் பெரிதாக இருக்கட்டும்”… இளைஞர்களுக்கு கமல்ஹாசன் எம்.பி நம்பிக்கைச் செய்தி..!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பல்வேறு இளைஞர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒரு குழந்தை அழுதபோதே நாம் அதைக் கவனித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நம் குழந்தைகள் பலர் உயிரிழக்கும் வரை நாம் காத்திருந்துவிட்டோம். கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சி வகுப்புகளும், ஆர்வத்திற்குப் பதிலாகப் பதற்றமும், தகுதிக்குப் பதிலாகக் குற்றச் செயல்களும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அமைப்பு சீரழிந்த ஒன்றாகும். கேள்விகளுக்குப் பதில்கள் கிடைப்பதற்குப் பதிலாக தடைகளும் தடியடிகளும் மட்டுமே குழந்தைகளுக்குக் கிடைக்கும்போது, அந்த நாடு தோல்வியடைந்ததாகவே அர்த்தம். இந்தியக் குழந்தைகளே, நீங்களே எங்களில் மிகச் சிறந்தவர்கள். உங்கள் கடமையை நீங்கள் செவ்வனே செய்துவிட்டீர்கள். இனி, உங்களுக்கான கடமையைச் செய்ய வேண்டியது நாட்டின் பொறுப்பு. உங்கள் கனவுகள் எப்போதும் பெரிதாக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.