Rock Fort Times
Online News

பாமகவில் தந்தை–மகன் மோதல் முடிவுக்கு வந்தது: வழக்கைத் திரும்பப் பெற்றார் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவராகத் தன்னை அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஜூலை 22) திரும்பப் பெற்றார். இதன் மூலம், பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து செயல்படுவது உறுதியாகியுள்ளது. முன்னதாக, பாமக பெயர், சின்னம் மற்றும் கட்சிக் கொடியை அன்புமணி ராமதாஸ் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும் கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. மேலும், சட்டப்படி அனுமதி இருந்தால் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும், அந்த மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதற்கிடையில், ராமதாஸ்–சரஸ்வதி தம்பதியரின் 61-வது திருமண நாளையொட்டி, ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது. அன்புமணி, தனது குடும்பத்தினருடன் சென்று பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்றார். இந்த நிலையில், பாமக தலைவராகத் தன்னை அறிவிக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது. எனவே, வழக்கைத் திரும்பப் பெற விரும்புகிறோம்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராமதாஸ் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற அனுமதி அளித்து, வழக்கை முடித்து வைத்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்