திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவர், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டின் அருகே ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். வழக்கம்போல நேற்று இரவு கோழிகளை வீட்டின் அருகே உள்ள கூண்டுக்குள் அடைத்து பூட்டி விட்டு வந்தார். இந்நிலையில் நள்ளிரவு 1மணி அளவில் கூண்டுக்குள் அடைத்த கோழிகள் கத்தும் சத்தம் கேட்டன. மேலும் சுந்தரம் வளர்த்து வந்த நாய் குரைத்துக் கொண்டே இருந்தது. நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு எழுந்த சுந்தரம், என்னவென்று சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது கோழி கூண்டுக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று முட்டையை
கவ்வியபடி படுத்து கிடந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு சுந்தரம் தகவல் கொடுத்தார் அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கோழி கூண்டில் பதுங்கி இருந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதனை வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர். தக்க நேரத்தில் நாய் குரைத்ததால் பாம்பின் பிடியிலிருந்து கோழிகள் அனைத்தும் உயிர் தப்பின.

Comments are closed.