2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை (118 உறுப்பினர்கள்) கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நேற்று (மே 10) ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த நிலையில், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர்
இன்று (மே 11) 9-30 மணிக்கு தொடங்கியது. சட்டமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. முதலாவதாக சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த், சௌமியா அன்புமணி உள்ளிட்ட அனைவரும் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்னொரு குழுவாகவும் வருகை தந்தனர். அதேபோல், அதிமுக உறுப்பினர் சி.வி சண்முகம் மட்டும் தனியாக வந்திருந்தார். அவரை எம்.எல்.ஏ பதவியேற்புக்காக சட்டப் பேரவை தலைமை செயலர் சீனிவாசன் அழைத்த போது, அவர் அங்கு இல்லை. ஏற்கனவே அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது. அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், கட்சித் தலைவரை மாற்ற வேண்டுமென கோரிக்கைகள் எழுந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், யார் அணியில் இருப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் சி.வி.சண்முகம் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.