Rock Fort Times
Online News

ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40 சதவீதம் வரி விதிப்பு: திருச்சியில் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கும் வெங்காயம்…!

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் விளைவிக்கப்படும் வெங்காயம் லாரிகள் மூலமாக திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு மொத்தமாக கொண்டு வரப்பட்டு இறக்கப்படுவது வழக்கம். காந்தி மார்க்கெட்டில் இட நெருக்கடி காரணமாக திருச்சி பழைய பால்பண்ணை அருகிலும் வெங்காய மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்த வியாபாரிகளிடமிருந்து வாங்கப்படும் வெங்காயம் சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு காரணமாக வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய முடியாததால் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கின்றன. இதுகுறித்து வெங்காய தரகு வர்த்தக மண்டி உரிமையாளரும், வெங்காய தரகு வர்த்தக மண்டி வியாபாரிகள் சங்கத்தின் செயலாளருமான தங்கராஜ் கூறுகையில்,
திருச்சி வெங்காய மண்டிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காய வரத்து நாளொன்றுக்கு 400 முதல் 500 டன் ஆக இருந்தது.

இதே அளவில் பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காய வரத்தும் இருந்தது. தற்போது பெல்லாரி வரத்து அதே நிலை நீடிக்கிறது. ஆனால், சின்ன வெங்காயத்திற்கு தற்போது சீசன் இல்லை என்பதால் வரத்து 150 முதல் 200 ஆக குறைந்துவிட்டது. இந்தநிலை ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும்.
தற்போது வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு இன்னும் இரண்டு மாத காலமாகும். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40% வரி விதித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களாக ஏற்றுமதி செய்யப்படவில்லை. ஏற்றுமதி செய்ய 40 % வரித்தொகையை அரசுக்கு முன்கூட்டியே செலுத்த வேண்டியிருப்பதால் விவசாயிகள் வரியை செலுத்த இயலாத நிலை உள்ளது. மின்னணு சாதனங்களுக்கு கூட இந்த அளவுக்கு வரி இல்லை. தற்போது சின்ன வெங்காயம் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் விற்பனை செய்தால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். விற்பனை வெகுவாக குறைந்துவிட்டதால்
வெங்காயம் மார்க்கெட்டில் தேக்கமடைந்துள்ளது. எனவே, மத்திய அரசு வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்