தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், இன்று அதிகாலை முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. அதன்படி, 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாது. இந்த தடை அமலுக்கு வந்துள்ளதை ஒட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை காசிமேடு, துறைமுகம், கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 20,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை கடலில் இருந்த விசைப்படகுகள் அனைத்தும் அதிகாலையிலேயே கரைக்கு திரும்பின. இந்த தடை என்பது நடுக்கடலில் சென்று ஆழமான பகுதிகளில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்கு மட்டுமே பொருந்தும். சிறிய ரக ஃபைபர் படகுகள், கட்டுமரம் மூலமாக கடலோரங்களில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ளலாம். இந்த தடைக்காலத்தின் போது மாநில அரசுகள் சார்பில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

Comments are closed.