திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு, தினமும் வெளிநாடுகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. இவற்றை தவிர உள்நாட்டு விமானங்களும் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பரபரப்பான விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் விளங்குகிறது. இந்நிலையில் இன்று(24-06-2024) திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியனின் மின்னஞ்சலுக்கு, ஒரு மெயில் வந்தது. அதில், திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைத்து தகர்க்க உள்ளனர். இதன் பின்னணியில் சர்வதேச தீவிரவாதிகள் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விமான நிலைய இயக்குனர், உடனடியாக மாநகர காவல்துறை ஆணையர் காமினிக்கு தகவல் தெரிவித்தார். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்க செய்யும் பிரிவு போலீஸ் ஆய்வாளர் எட்வர்டு தலைமையிலான குழுவினர், மோப்பநாய் உதவியுடன் திருச்சி விமான நிலையம் முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.
இதேபோல, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலையத்திற்குள் பயணிகள் வந்து செல்லும் பகுதி, சரக்கு விமானங்கள் வந்து செல்லும் முனைய பகுதிகளில் தீவிரமான சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்தது. திருச்சி விமான நிலைய இயக்குனருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையம் காலை முதல் மாலை வரை பரபரப்புடன் காணப்பட்டது.
Comments are closed.