Rock Fort Times
Online News

தரமில்லாத கேன் குடிநீரை விற்றால் உரிமம் ரத்து: தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை…!

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதனால், வீட்டிலிருந்து வெளியே செல்பவர்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கிக் குடிப்பது அதிகரித்து வருகிறது. அப்படி விற்கப்படும் ஒரு தண்ணீர் கேன் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனையாகி வருகிறது. ஆனால், கடைகளில் வாங்கிக் குடிக்கும் கேன் தண்ணீர் மூலம் ஒவ்வாமை பரவுவதாகவும், உடலில் நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் கோடைக்காலத்தில் மக்களுக்கு தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கேன் தண்ணீரில் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்புத் துறை உரிமம் (FSSAI) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெறுவது அவசியம். குறிப்பாக, கேன்களில் நிறுவனம் மற்றும் உற்பத்தியாளர் பெயர், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி கட்டாயம் இருக்க வேண்டும். கேன் தண்ணீரை நேரடியாக சூரிய ஒளியில் தேக்கி வைக்கக் கூடாது. கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது. கேன்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பலமுறை பயன்படுத்திய பழைய கேன்களில தண்ணீரை விற்பனை செய்யக்கூடாது. விதிகளை பின்பற்றாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும். ஒரு லிட்டர் குடிநீரில் கால்சியம் 10 – 75 மில்லி கிராம் என்ற அளவிலும், மெக்னீசியம் ஒரு லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லி கிராம் என்ற அளவிலும் இருப்பதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது பலமுறை புகார்கள் வரும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யலாம்’ எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்