தொடர் அமளி காரணமாக அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்- சபாநாயகர் அப்பாவு அதிரடி…!
தமிழக சட்டப்பேரவை கடந்த 22ம் தேதி தொடங்கி மானியக்கோரிக்கைக்கான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் எனக்கூறி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், கேள்வி நேரம் முடிந்த பிறகு, நேரமில்லா நேரத்தில் இதுகுறித்து விவாதிக்கலாம் என்றும், அப்படி விவாதிக்க வேண்டுமானால், இதுகுறித்து தீர்மானம் கொண்டுவரலாம் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். ஆனால், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க கோரி, அதிமுகவினர் தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதன் காரணமாக ஒரு நாள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர். வழக்கம்போல சபை கூடியதும் இன்றும்( 26-06-2024) அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் இதையடுத்து, கேள்வி நேரத்தை ஒத்திவைக்க முடியாது என்று கூறிய சபாநாயகர், சட்டமன்ற விதிகளை மதிக்க வேண்டும், இருக்கையில் அமரவும் என்று தெரிவித்தார். ஆனால்,
தொடர்ந்து அதிமுகவினர் சபாநாயகரின் இருக்கையை சுற்றி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேசிய அவை முன்னவர் துரைமுருகன், மலிவான விளம்பரத்தை தேடி எதிர்கட்சியினர் அலைகிறார்கள். பேரவை விதி 121ன் கீழ் அதிமுக உறுப்பினர்களை தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
Comments are closed.