திருச்சியில் அதிமுக சுவர் விளம்பரத்தில் நிர்வாகியின் பெயர் அழிப்பு !
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அண்ணா, எம்ஜிஆர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், ஜெ.சீனிவாசனுக்கு கட்சி பொறுப்பு வழங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து திருச்சி ஏர்போர்ட் பகுதி செயலாளர் விஜி, திருச்சி விமான நிலையம் எதிரில் உள்ள அரசு சுகாதாரத்துறை பணிமனை வளாக சுவற்றில் விளம்பரம் செய்திருந்தார். அந்த சுவர் விளம்பரத்தில் ஏர்போர்ட் விஜி பெயர் மட்டும் அழிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த 65 ஆவது வார்டு அதிமுக வட்ட செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் சுமார் 50 பேர் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள், திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். அப்போது போலீசார் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதனை ஏற்க மறுத்ததால் காவல்துறையினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தையில் பெயர் அழிக்க காரணமாக இருந்தவர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.