திருச்சி மாவட்டம் முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கூலி தொழிலாளி செல்லமுத்து என்பவர் குளித்துக் கொண்டிருந்த போது கலை நயம்மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய காளி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் யமுனா, முசிறி வட்டாட்சியருக்கு தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ் சிலையை கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தார். காளி சிலை கிடைத்தது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் மற்றும் முசிறி கோட்டாட்சியர் ராஜன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட காளி சிலை 22 சென்டிமீட்டர் உயரமும், 1.620 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. 10 கரங்களுடன் கழுத்தில் கபால மாலை அணிந்தும், கரங்களில் சக்கரம், அாிவாள், சூலம், கதாயுதம், கேடயம், வில், ரத்தம் ஏந்தும் சட்டி, சங்கு ஆகியவை ஏந்தியவாறு வலது காலில் ருத்திரனை மிதித்தவாறு
தலையில் மகுடம் சூடியும், விரித்த தலைமுடியுடன் பீடத்தின் மீது நின்றகோலத்தில் காணப்படுகிறது. இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பொற்கொல்லர் ஒருவர் அழைத்து வரப்பட்டு சிலை சோதிக்கப்பட்டது. சோதனையில் அச்சிலை ஐம்பொன் சிலை என்பது முதல் கட்டமாக தெரியவந்துள்ளது. இதையடுத்து காளி சிலை பத்திரமாக பெட்டியில் வைத்து சீல் இடப்பட்டு முசிறி சார்நிலை கருவூல காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இச்சிலையை காவிரி ஆற்றில் வீசிச் சென்றது யார்?, எங்கேனும் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலையை இங்கு கொண்டு வந்து வீசி சென்றார்களா?, எந்த கோவிலில் திருடப்பட்டது, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார்? என்பது குறித்து முசிறி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.