வாக்கு வங்கிக்காக எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டம் மக்களிடம் நம்பிக்கை பெறாது…
திருச்சியில் த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் த.மா.கா.தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவா் கூறியதாவது:
ஒத்த கருத்து ஏற்படாத எதிர்கட்சிகளின் கூட்டம், முதல் சுற்றிலேயே நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கத் தவறி தோல்வியை தழுவியுள்ளது. தங்களது மாநிலத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாத அம்மாநிலத் தலைவர்கள், நாட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நினைப்பது சாத்தியமற்றது. மணிப்பூர் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் சுமூகநிலை ஏற்படும். இதனை எதிர்கட்சிகள் அரசியலாக்க நினைக்கிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை செயல்பட்டு செந்தில் பாலாஜி வீட்டில் சோதனையிட்டு, ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி கைது செய்துள்ளது. இந்த கைதுக்கும், மத்திய ஆட்சியாளர்களுக்கும் சம்மந்தமில்லை. தமிழக ஆளுநர் ஜனநாயகத்துக்குட்பட்டே தனது கருத்துக்களை கூறி வருகிறார். மக்களின் சுமையை குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, கண்மூடித்தனமாக வரிகளை ஏற்றி மக்களின் சுமையை அதிகரித்து வருகிறது. மக்கள் விரோத அரசாக தி.மு.க.அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு அரசு மதுபான கடைகளே காரணம். அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததின் அடிப்படையில் வேறுவழியின்றி 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளது. திருச்சி மாநகரில் புதைவடிகால், குடிநீர் சீரமைப்பு திட்டங்களை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும். குறிப்பாக, திருச்சி- தஞ்சை சாலை சீரமைப்புப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் சினிமா உள்ளிட்ட எத்துறையைச் சேர்ந்தவர்களும் பொதுவாழ்வுக்கு வரலாம். அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் த.மா.கா. தொடர்கிறது. நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ள பழங்குடி நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மாணவி எஸ். கோகிலாவுக்கு அரசு கல்லூரியில் இடம் ஒதுக்கித் தர வேண்டும். பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஜூலை 15-ம் தேதி ஈரோட்டில் பிரம்மாண்டமாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி, திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் டி.குணா, வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவீந்திரன், மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால், தொழிலதிபர் தர்மராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜு உள்பட டெல்டா மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.