திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி பகுதியை சேர்ந்த அப்துல்சுபான் மனைவி சர்தாஜ் பேகம் (வயது 48). இவர் தனது மகன் சித்திக்குடன் (23) அதே பகுதியில் உள்ள சாய் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை ( 10.06.2023 ) அதிகாலை 3 மணிக்கு சர்தாஜ் பேகம் குடியிருக்கும் 2-வது மாடிக்கு குழாய் வழியாக ஏறி வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.பின்னர், அதே நபர் முதல் மாடியில் குடியிருக்கும் ஆட்டோ டிரைவரான சிவமயம் (35) என்பவரது வீட்டில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி உள்ளான். மேலும் அருகே உள்ள துரைசாமி (54) வீட்டிலும் திருடி உள்ளான். இந்த சம்பவம் குறித்து சர்தாஜ்பேகம் மற்றும் சிவமயம் ஆகியோர் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.