Rock Fort Times
Online News

சிறிய மழைக்கே தாக்கு பிடிக்காத திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள தெருச்சாலைகள்…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதேபோல, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்  அருகே உள்ள கம்பரசம்பேட்டை தமிழன் நகர், கணபதி நகர், விசாலாட்சி அவன்யு, வெள்ளாந் தெரு  உள்ளிட்ட தெரு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி தான் சென்று வருகின்றனர். ஆட்டோக்கள் மேடு – பள்ளங்களில் குலுங்கி, குலுங்கி சென்று வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த சாலையில் சென்ற வயதான ஒருவர் இருசக்கர வாகனத்தில் தடுமாறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தெருக்களில் உள்ள சாலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக இதே நிலையில் தான் இருக்கின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தமிழன் நகர், கணபதி நகர், வெள்ளாந் தெரு, விசாலாட்சி அவன்யு பகுதியில் வசிக்கும் மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாமல் சாலையிலேயே கொட்டி விட்டு செல்கின்றனர். தற்போது மழை காலம் என்பதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  ஆகவே, குண்டும்- குழியுமாக உள்ள மேற்கண்ட தெரு ச்சாலைகளை சீரமைக்கவும், குப்பை தொட்டிகள் வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்