திருச்சி அரசு மருத்துவமனையில் நோய் தொற்றை ஒரே நாளில் கண்டறியும் நவீன கருவி-அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை தெரிவிக்கும் நவீன கருவியினையும், பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணிக்கும் வகையில் ரூ.36 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட மின்தூக்கி சேவையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(17-11-2024) தொடங்கி வைத்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில் உணவு வழங்கும் தட்டுகளையும், முகம் மற்றும் வாய் பகுதி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பேஸ்ட் மற்றும் பிரஸ் ஆகியவற்றை வழங்கினார். அதனைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் மருத்துவமனை அருகிலேயே போலீஸ் பூத் ஒன்று கட்டவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நோய் கிருமி கண்டறிவதற்கான புதிய ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நோய் தொற்றை கண்டறிய 7 நாட்கள் வரை ஆனது. இந்த நவீன கருவி மூலம் நோய் தொற்றை ஒரே நாளில் அறிந்து கொள்ள முடியும். அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்படும். முதலமைச்சர் அதை திறந்து வைப்பார். திருச்சிக்கு சித்தா மருத்துவ கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென ஏற்கனவே அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நிதி நிலைமைக்கு ஏற்ப அது கொண்டு வரப்படும் என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார். மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed.