Rock Fort Times
Online News

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு…! 

2026- 27ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு 3,02,373 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் 2,45,220 பேர் பதிவுக் கட்டணம் செலுத்தி இருந்தனர். ஜூன் 5ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற்ற நிலையில், இன்று (ஜூலை 1) தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. 2.36 லட்சம் மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 10 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தருமபுரி மாணவி முதலிடம்,

பொதுப் பிரிவுகளுக்கான தரவரிசையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.அக்‌ஷிதா என்ற மாணவி முதல் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.ரோஹித் பாலன் என்ற மாணவர் இரண்டாம் இடமும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வெங்கடகிருஷ்ணன் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார் 7.5 சதவீத இடஒதுக்கீடு பிரிவில் சேலம் அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த மாணவி பி.தேவதர்ஷினி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். திருச்சி டி.என்.அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் கே.புகழேஷ் இரண்டாம் இடமும், திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த மாணவர் ஆர்.ஜனார்த்தனம் மூன்றாம் இடமும் பிடித்துள்ளார்.

தரவரிசைப் பட்டியலைக் காண்பது எப்படி?

மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். அதில், https://www.tneaonline.org/user/login என்ற இணைப்பு மூலம் லாகின் செய்ய வேண்டியது அவசியம். அதில் இ மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும். அதில் நம்முடைய தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் காணலாம். மாணவர்கள் இதுதொடர்பான விரிவான விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்