Rock Fort Times
Online News

பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள்… அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு..!

தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு, முதலமைச்சர் விஜய் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. சட்டம்-ஒழுங்கு, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட இந்த மாநாட்டின் 2-ம் நாள் கூட்டம், இன்று (ஜூன் 30) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டு, நிர்வாகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் நிறைவில் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கிய முதலமைச்சர் விஜய், “அதிகாரிகள் விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகளில் விசாரணை மற்றும் நடவடிக்கைகளில் தாமதம் இருக்கக் கூடாது. காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்துவதுடன், பெண்களின் பாதுகாப்பு, மக்கள் நலன் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்துக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்த மாநாட்டில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்