Rock Fort Times
Online News

வேனில் திருச்சி அழைத்து வந்த போது உடைந்த கையை மீண்டும் உடைத்தனர்- போலீசார் மீது நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு…!

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீசார் குறித்து தவறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரின் பேரில், சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக சவுக்கு சங்கரை இன்று(15-05-2024) கோவையிலிருந்து திருச்சிக்கு போலீசார் அழைத்து வந்து நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர் படுத்தினர். அப்போது சவுக்கு சங்கர் நீதிபதியிடம் கூறுகையில், கோவையில் இருந்து தன்னை வேனில் அழைத்து வந்த பெண் போலீசார், ஏற்கனவே சிறையில் முறிக்கப்பட்ட கையை, மீண்டும் முறுக்கி உடைத்தனர். மேலும், என்னை முதுகிலும் அடித்தார்கள். அதனை வீடியோ எடுத்தனர் என குற்றம் சாட்டினார். இதனை கேட்ட நீதிபதி, ‘சவுக்கு சங்கரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரது உடலை முழு பரிசோதனை செய்து, அதன் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் பலத்த பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவுக்கு பின் மீண்டும் நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்படுகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்