திருச்சி மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிலுள்ள சார்பு நீதிமன்றங்களுக்கு (சிவில் கோர்ட்டுகளுக்கு) ஆண்டுதோறும் மே 1 முதல் ஒரு மாதகாலத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சார்பு நீதிமன்றத்துக்கு இன்று மே 1 முதல் வருகிற ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் மகளிர் நீதிமன்றம், கூடுதல் மகளிர் நீதிமன்றம், பிசிஆர் நீதிமன்றம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம் உள்ளிட்ட சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றம் (சிஜேஎம் கோர்ட்), மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் (மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள்) உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படும். அதேபோல குற்ற வழக்குகள் குறித்த அவசர மனுக்களை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியும் (பிசிஆர் நீதிமன்றம்), சிவில் வழக்குகள் தொடர்பான அவசர மனுக்களை முதலாவது சார்பு கோர்ட் நீதிபதியும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை கோர்ட் பொறுப்பு நீதிபதிகளாக இருந்து விசாரிப்பார்கள்.

இந்நிலையில் முதன்முறையாக குடும்ப நல நீதிமன்றங்களுக்கும் 14 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமனிடம் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், குடும்ப நல நீதிமன்றங்களுக்கும் மே 1 முதல் 15 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப நல நீதி மன்றங்களுக்கும் மே 1 முதல் 15 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் ஜோதிராமன் அறிவித்துள்ளார். இதையடுத்து குடும்பல நீதிமன்றங்களுக்கும் 14 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை திருச்சி நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன

Comments are closed.