திருச்சி மாவட்டம் லால்குடி புள்ளம்பாடி அருகேயுள்ள மணக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ஜீவிதா (28). பி.இ பட்டதாரி. இவருக்கும் முசிறி பார்வதிபுரம் அழகாப்பட்டி சாலையைச் சேர்ந்த கமல்காந்த் (35) என்பவருக்கும் கடந்த 2019 ம் ஆண்டு ஜூன் 6 ம் தேதி திருமணம் நடந்தது. திருமண சீர்வரிசையாக சுமார் 60 பவுன் நகைகள், கார் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கமல்காந்த் வெளிநாட்டில் வேலை பார்த்தார். திருமணத்துக்கு பின்னர் கமல்காந்த் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து ஜீவிதா கேட்டதற்கு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஜீவிதா, பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்து பெண்வீட்டார் கேட்டபோது, மேலும் ரூ. 4 லட்சம் வரதட்சணை கொடுத்தால் தான் மீண்டும் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதாக கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 2020 ம் ஆண்டு பிப்ரவரி 4 ம் தேதி, கமல்காந்த் ஜீவிதாவை, படுக்கையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுதொடர்பாக முசிறி போலீசார் வழக்குப் பதிந்து கமல்காந்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் மற்றும் இருதரப்பு விவாதங்கள் முடிந்த தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து கமல்காந்துக்கு, வரதட்சணை குற்றத்துக்கு 3 ஆண்டு சிறையும், கொலை குற்றத்துக்கு ஆயுள் சிறையும், ரூ.10,000 அபராதமும் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.கே. ஜாகிர்உசேன், முசிறி காவல் நிலைய ஆய்வாளர் பால்ராஜ், காவலர் நடராஜ் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

Comments are closed.