திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அனீஸ். இவருக்கும், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த சமீனாபானு (23). என்பவருக்கும் கடந்த 2020 நவம்பர் 29-ந் தேதி திருமணம் நடந்தது .முகமது அனீஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். திருமணத்தின்போது 50 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் தருவதாக பெண் வீட்டார் கூறியுள்ளனர். பின்னர் திருமணத்தின்போது 20 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் ரூ.ஒரு லட்சம் ஆகியவற்றை கொடுத்தனர். மற்ற நகை, பணத்தை 3 மாதத்தில் தருவதாக சொல்லியதாக கூறப்படுகிறது. ஆனால், திருமணம் ஆன முதல் வாரத்தில் இருந்தே சமீனா பானுவை அவரது கணவர் முகமது அனீஸ், மாமனார் முகமது ஹனி, மாமியார் ரஹ்மத் நிஷா மற்றும் உறவினர்கள் பிஸ்மில்லா பானு, பாத்திமா சல்மா ஆகியோர் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், முகமது அனிசை அவரது பெற்றோர் 2021 ஜனவரி மாதத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கர்ப்பமாக இருந்த சமீனா பானுவுக்கு பெண் குழந்தை பிறந்தது .ஆனால் , இரண்டு வருடம் ஆகியும் குழந்தையை பார்க்க தந்தை வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னிடம் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் வரதட்சணையாக நகைகள் மற்றும் பணம் கேட்டு தொந்தரவு கொடுப்பதாக திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீனாபானு புகார் அளித்தார். அதன் பேரில், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் முகமது அனீஸ் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.