சென்னை வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாத்தி-கலைஞர் நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார் (45). ஓட்டேரியில் மருந்து கடை நடத்தி வந்தார். வழக்கம்போல் விற்பனையை முடித்துவிட்டு நேற்று இரவு 10 மணியளவில் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஓட்டேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த வெட்டுப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வினோத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ஓட்டேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன் மாமூல் கேட்டு வினோத்குமாரை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். ஆனால், மாமூல் கொடுக்க மறுத்த அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிலம்பரசன் ஆதரவாளர்கள், வினோத்குமாரிடம் புகாரை திரும்ப பெற வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால், வினோத்குமார் புகாரை வாபஸ் பெற மறுத்ததால் அவரை சிலம்பரசன் கும்பல் வெட்டி சாய்த்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.