கடந்த 2014-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அங்கு முதல்வராக இருந்த கே.சந்திரசேகரராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி அரசு ஆட்சியில் இருந்தது. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது ராஷ்ட்ரி சமிதி கட்சி தோல்வியை தழுவியது. மொத்தமுள்ள 119 இடங்களில் 65 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கேசிஆரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியது. ராஷ்டிர சமிதி இரண்டாவது இடத்தையும், பாஜக மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
இங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்தவர் ரேவந்த் ரெட்டி. அவருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், தெலுங்கானா முதல்வராக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார் . துணை முதல்வராக பத்தி விக்ரமார்கா பதவியேற்றுக் கொண்டார். இவர்களுடன் தாமோதர் ராஜா நரசிம்மா, உத்தம் குமார் ரெட்டி, கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, சீதாக்கா, பொன்னம் பிரபாகர், ஸ்ரீதர் பாபு, தும்மலா நாகேஷ்வர ராவ், கொண்ட சுரேக்கா, ஜுபால்லி மற்றும் கிருஷ்ணா பொங்குலிடி ஆகிய 10 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சர்களுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தெலுங்கானா சட்டப்பேரவை பலத்தின்படி, முதல்வர் உட்பட 18 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா வகீரா, வயநாடு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.