நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததோடு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆக பதவி வகித்து வந்த திருநங்கை அப்சரா ரெட்டி கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகுந்த வருத்தத்துடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். அதிமுகவுடனான எனது தொடர்பு ஒருபோதும் வெறும் அரசியல் சார்ந்ததாக இருந்ததில்லை. அது, புரட்சித் தலைவி அம்மா மீது நான் கொண்டிருந்த ஆழ்ந்த போற்றுதல், அன்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையில் வேரூன்றியதாகும். அவரை நான் எப்போதுமே எனது அரசியல் உத்வேகமாகவும் தலைவராகவும் கருதி வந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை, அரசியல் என்பது உடைப்பதாக அல்ல, உருவாக்குவதாக இருக்க வேண்டும்; விலக்குவதாக அல்ல, உள்ளடக்குவதாக இருக்க வேண்டும். மேலும், பிளவுகளை உருவாக்குவதற்குப் பதிலாக மக்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும். இந்த முடிவு கசப்புணர்ச்சியாலோ அல்லது அவமரியாதையாலோ எடுக்கப்பட்டதல்ல. எனது நம்பிக்கைகளுக்கும், எனது பொது வாழ்க்கைக்கு வழிகாட்டிய கொள்கைகளுக்கும் உண்மையாக இருப்பதற்காக, உணர்வுப்பூர்வமாகவும் ஆழ்ந்தும் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். வாழ்வின் ஒரு முக்கிய அத்தியாயத்தை வடிவமைத்த வாய்ப்புகள், பொறுப்புகள், நட்புகள் மற்றும் அனுபவங்களுக்கு நன்றியுடன் கட்சியை விட்டு விடைபெறுகிறேன். அதிமுகவுடனான என் தொடர்பையும், என்னுடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் பெற்ற மக்களையும் நான் என்றும் போற்றுவேன். என் அரசியல் பயணம் இப்போது வேறு திசையில் செல்லக்கூடும், ஆனால் மக்களுக்குச் சேவை செய்வதற்கான என் அர்ப்பணிப்பு மாறாமல் உள்ளது. இந்த அரசியல் முடிவுக்குப் பிறகும் நமக்கிடையேயான தனிப்பட்ட அன்பும் மரியாதையும் நீடிக்கும் என்று நான் மனதார நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகிய அப்சரா ரெட்டி தவெகவில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.
***

Comments are closed.