திமுக முன்னாள் அமைச்சர் லஞ்சம் வாங்கியது உண்மை: அதற்கு நானே சாட்சி… ‘பகீர்’ கிளப்பிய அமைச்சர் மரியவில்சன்…!
தமிழக சட்டப்பேரவையில் இன்று(24-08-2026) நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரிகள் கொண்டு வந்தோம் என்பது முக்கியமில்லை. தரம்தான் ரொம்ப முக்கியம். நாமும் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறோம். முன்னாள் அமைச்சர்களும் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். தரத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கும் தெரிந்திருக்கும். அதில் பார்த்தீர்கள் என்றால், certification என்று சொல்வார்கள். அரசு கலைக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளில் எத்தனை சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள் என்று பட்டியல் எடுத்தோம். ஆனால், கடந்த 30, 40 ஆண்டுகளாக ஒன்றுமே இல்லை. ஒரு ஐஓஎஸ் சான்றிதழ்கூட வாங்கவில்லை. எந்த சான்றிதழும் வாங்காமல் நாம் இத்தனை ஆண்டுகள் கல்லூரிகளை நடத்தி வந்திருக்கிறோம் என்றால், எப்படி தரம் வரும். எண்ணிக்கை மட்டுமே வரும். அதனடிப்படையில், எந்த முயற்சியும் எடுத்ததுபோல் தெரியவில்லை. தனியார் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான், வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது. திமுக ஆட்சியில் பல இடங்களில் லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது. அதில், மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுள் நானும் ஒருவன் . எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்கின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் இங்கு நானே ஒரு சாட்சி தான். முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சபையில் இல்லை. என்றாலும், இதைநான் கூறவேண்டும். இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அவர்கள் என் மீது வழக்குக்கூட போடட்டும். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். தி.நகரில் எந்த இடத்தில் எவ்வளவு தொகை கொடுத்தோம் என்பது குறித்து நானே சொல்ல முடியும். சிறுபான்மை நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை வாங்கினீர்கள்? இதற்கு நானே சாட்சி. இவ்வாறு அவர் கூறினார். நிதி அமைச்சர் மரிய வில்சனின், இந்தக் குற்றச்சாட்டுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

Comments are closed.