Rock Fort Times
Online News

மாணவர்களை பக்குவப்படுத்துவதே விளையாட்டு தான்: ஒவ்வொரு பள்ளியிலும் உடற்கல்வி வகுப்பு கட்டாயம்…* அமைச்சர் ராஜ்மோகன்..!

தமிழக சட்டமன்றத்தில் இன்று(24-08-2026) நடைபெற்ற மானியக் கோரிக்கை உரையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;-
“எந்த சமூகத்தை பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயே வரகூடாது என்று சொன்னார்களோ, அந்த சமூகத்தில் இருந்து வந்த என்னை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கிய நமது முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரால் மட்டுமே இது சாத்தியம். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு சபாநாயகருக்கு ரசிகர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றால், அவர் நமது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்தான். அவரிடம் நான் நிறைய
கற்றுக் கொள்கிறேன். இத்தனை நாட்கள் நாம் படித்து வந்த பாடத்திட்டம் நமக்கு இதுவரை உதவி செய்துள்ளது. அதில் சிறிய மாற்றங்களை செய்ய உள்ளோம். புத்தகங்களில் இருப்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக புரிவது இல்லை. இதில் சராசரி மாணவர்கள் என்று யாரும் கிடையாது. நமது த.வெ.க. அரசின் பள்ளிக்கல்வித்துறை இனி யாரையும் சராசரி மாணவர் என்று சொல்லக் கூடாது என்று தீர்மானித்துள்ளது. மெல்ல கற்கும் குழந்தை என்று கூட சொல்ல வேண்டாம். ‘தன் வேகத்தில் கற்கும் குழந்தை’ என்றுதான் அவர்களை குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தேவையான, சரியான கல்விச் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம் என்பதை விட, எப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம் என்பதைதான் எங்கள் மானியக் கோரிக்கை யோசிக்கிறது.

சமீபத்தில் ஒரு பள்ளி சார்ந்த பிரச்சினையின்போது முதல்-அமைச்சர் விஜய் என்னை அழைத்து பேசினார். அந்த பிரச்சினை குறித்து நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை அவரிடம் விளக்கினேன். அவர் என்னை நிறுத்தி. ஒரு மாணவர் தவறு செய்கிறார் என்றால், அந்த மாணவரை குற்றவாளியாக பார்க்காமல், பாதிக்கப்பட்டவராக பார்க்க வேண்டும் என்று கூறினார். மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் எப்படி தடுப்பது? இதற்கு நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் உடற்கல்வி வகுப்புகள்தான். தமிழ்நாட்டில் எந்தவொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி வகுப்பைக் கூட மாற்றம் செய்யக் கூடாது என த.வெ.க. அரசு முடிவெடுத்திருக்கிறது. உடலை உறுதி செய்வதற்காக, மாணவர்களின் சிந்தனையை செதுக்குவதற்காக பல்வேறு அறிவிப்புகளை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆசிரியர்கள் பிரச்சினையை பேசி தீர்ப்பதற்காக உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு, ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்