40 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் “பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்” கொண்டு வரப்படும் – அமைச்சர் வினோத் !
தமிழக வேளாண் பட்ஜெட்டில் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படும் பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க இயக்கம் கொண்டு வரப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார். இந்தியாவின் மொத்த நூற்புத் திறனில் 46 சதவீதம், விசைத்தறித் திறனில் 22 சதவீதம், கைத்தறித் திறனில் 12 சதவீதம், பருத்தி பின்னலாடை உற்பத்தியில் 70 சதவீதம் தமிழ்நாட்டில் அமைந்து, நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றி வருகிறது. வெள்ளைத் தங்கம்’ என்றும், ‘King of Fibre’ என்றும் அழைக்கப்படும் பருத்தி, தமிழ்நாட்டில் சராசரியாக 3 இலட்சத்து 14 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு 2 இலட்சத்து 50 ஆயிரம் பொதிகள் (Bales) உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதனால், தமிழ்நாட்டில் செயல்படும் பருத்தி நூற்பாலைகளின் தேவையான 120 இலட்சம் பொதிகளில், 98 சதவீதம் பிற மாநிலங்களில் இருந்தே பெறப்படுகிறது. எனவே, பருத்தி உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில், உயர் விளைச்சல், தொழில்நுட்பங்களான அடர் நடவு, நெருக்க நடவு, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, நுனிக்கிள்ளுதல் ஆகியவற்றோடு வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் மிக நீண்ட இழை பருத்தி சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி ஆகியவற்றையும் ஊக்குவிக்க “பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்” 2026-27 ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும். நடப்பாண்டில், 73 ஆயிரத்து 360 ஏக்கர் பரப்பளவில் 27 கோடியே 21 இலட்சம் ரூபாய் மத்திய, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில், 40 ஆயிரம் பருத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Comments are closed.