அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தே.மு.தி.க.வினர் ஆா்ப்பாட்டம் – மறியல்…!
போக்குவரத்து பாதிப்பு....
தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ ரூபாய் ஆயிரத்தை அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழங்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பாக தே.மு.திகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மைக்செட் ஒலி அளவை குறைக்க வேண்டும். சாலையோரம் நடப்பட்டிருந்த தே.மு.தி.க. கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என மாநகர காவல் உதவி ஆணையர் கென்னடி போலீசாருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தே.மு.தி.க.வினர் போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் சாலை மறியலை கைவிட்டு மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சன்னாசிப்பட்டி பாரதிதாசன், வடக்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தொழிற்சங்க அமைப்புசாரா செயலாளர் திருப்பதி, முன்னாள் அவைத்தலைவர் அலங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.மாதவன் கண்டன உரையாற்றினார். தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காவிரியில், கர்நாடக அரசு தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், விளைநிலங்களை அழித்து வரும் நெய்வேலி என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர்கள் வி.கே.ஜெயராமன், முருகேசன், அர்ஜுன், மாவட்ட பொருளாளர்கள் மில்டன்குமார், ஆறுமுகம், வசந்த் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டியன், பகுதி செயலாளர்கள் என்.எஸ்.எம்.மணிகண்டன், சாதிக், ப்ரீத்தா விஜய் ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.