மத்திய அரசு, நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம்(ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(சி.ஆர்.பி.சி), மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களின் பிரிவுகளை வடமொழி தலைப்புகளில் பாரதிய நியாய ஷன்ஹிதா, பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா, பாரதிய சக்ஷய அதிநயம் என மாற்றி புதிய சட்டங்களாக கொண்டு வந்தது. இந்த 3 சட்டங்களும் நேற்று( ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. அதன்படி தமிழகத்திலும் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக ஏற்கனவே தமிழக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று திருச்சி மாநகரில் புதிய சட்டங்களின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திருச்சி புத்தூர் பகுதியில் தன்ராஜ்(வயது 43) என்ற பெயிண்டர் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை பொருத்தமட்டில் முன்பு இந்திய தண்டனைச் சட்டம் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது புதிய சட்டமான பாரதிய நகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா 194 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், அதே காவல் நிலையத்தில் குட்கா தொடர்பான வழக்கு பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா (பி.என்.எஸ்.) புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
புறநகர் பகுதி காவல் நிலையங்களில் மொத்தம் 7 வழக்குகள் புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.