திருச்சியில் உள்ள நகை அடகு கடையில் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணம் பெற்ற 7 பேர் கைது- “ஹாயாக” காரில் வலம் வந்த போது சிக்கினர்…!
திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் அம்மன் குடியை சேர்ந்தவர் அன்பழகன் ( 37). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இந்த கடைக்கு காரில் வந்த ஒரு மர்ம கும்பல், தங்களிடம் 2 கிலோ தங்க கட்டிகள் உள்ளன. அவற்றை மார்க்கெட் விலையைவிட மிக குறைவாக தருகிறோம் என்று கூறியதோடு அதற்கு முன் பணம் 50,000 கொடுக்குமாறும், மீதி பணத்தை தங்கத்தை கொடுக்கும் போது தந்தால் போதும் என்று கூறியுள்ளனர். அதற்கு அன்பழகன், தன்னுடைய முதலாளியிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர், கல்லாப் பெட்டியில் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார். காரில் வந்தவர்கள் சரி என்று கூறி ஒரு தங்க கட்டியை மட்டும் கொடுத்து விட்டு ரூ.5 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு மீதி பணத்தை பிறகு வந்து வாங்கிக் கொள்கிறோம் என கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அந்த தங்கக் கட்டியை உரசிப் பார்த்த அன்பழகன், அது போலியானது என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து போலி தங்க கட்டிகளை கொடுத்து ஏமாற்றிய நபர்களை தேடி வந்தார். இந்நிலையில் முக்கொம்பு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தந்துள்ளனர். இதனால், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், மணப்பாறையை சேர்ந்த சகாய ஆரோக்கியதாஸ் (40), திண்டுக்கல்லை சேர்ந்த முருகன் (59), கரூர் மாவட்டம் பி.உடையாபட்டி மேட்டுபட்டியை சேர்ந்த சூசைராஜ் (40), திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா ரெட்டி தெருவை சேர்ந்த ஆதாம் சேட்டு (40), மணப்பாறை தாலுகா தல்லாத்துப்பட்டியை சேர்ந்த தங்கதுரை (46), கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனகராஜன் (46),
கடவூர் தேவேந்திர குல வெள்ளாளர் தெருவை சேர்ந்த பாண்டியன்( 55) என்பது தெரிய வந்தது. மேலும், ஜீயபுரம் பகுதியில் உள்ள நகை அடகு கடையில் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணம் பெற்றது அவர்கள் தான் என்பதும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து , அவர்கள் 7 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.
Comments are closed.