Rock Fort Times
Online News

திருச்சி எம்பி தொகுதியில் 35 வேட்பாளர்கள் – 3 வாக்குப்பதிவு எந்திரங்கள்…!

தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீப்குமார் தகவல்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, கணினி வழி குலுக்கல் முறையில் பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் பணியை தேர்தல் நடத்தும் அலுவலரும்,
திருச்சி மாவட்ட ஆட்சியருமான மா.பிரதீப்குமார், தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் மா.பிரதீப்குமார் கூறுகையில் , திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 2,547 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. இவற்றுக்கு 12,212 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,053 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 3,307 வாக்கு சரிபார்க்கும் கருவிகளும் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த சட்டப் பேரவை தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், மணப்பாறை தொகுதிக்கு 1,164 வாக்குபதிவு இயந்திரங்கள், ஸ்ரீரங்கத்துக்கு 812, லால்குடிக்கு 301, மண்ணச்சநல்லூருக்கு 327, முசிறிக்கு 312, துறையூர் (தனி) தொகுதிக்கு 334 என மொத்தம் 3,250 வாக்குபதிவு இயந்திரங்கள் இரண்டாம் கட்டமாக கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  திருச்சி மக்களவைத் தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவு பணிகளுக்காக அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து 1940 வாக்குபதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் விரைவில் எடுத்து வரப்பெற்று, சரிபார்க்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர், நோட்டாவுக்கு ஒன்று என 16 பொத்தான்கள் மட்டுமே இருக்கும். ஆனால், 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தலா 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு. திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் தலா 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல, கரூர் மக்களவைத் தொகுதியில் 54 பேர் போட்டியிடுவதால் மணப்பாறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தலா 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் தலா 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ந.சீனிவாசன், தேர்தல் வட்டாட்சியர் செல்வகணேஷ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

work from home job போல அரசியல் ! நடிகர் விஜய்யை விமர்சனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்