திருச்சியில் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் மேலும் 3 இரவு நேர தங்கும் விடுதிகள்…!
திருச்சி மாநகரில், ஆதரவற்ற நிலையில் சாலையோரங்களில் தங்குபவர்கள், பாலங்களுக்கு அடியில் தங்குபவர்களின் நலன்கருதி மேலும் 3 இரவு நேர தங்கும் விடுதிகளை கட்ட திருச்சி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அங்கு அவர்களுக்கு தங்க இடம் அளிக்கப்படுவதுடன் உணவு வசதியும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இதற்கென ரூ.1 கோடியில் திருவெறும்பூர், உறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படுகிறது.அவற்றில் உணவுக்கூடம், சமையலறை, தங்குமிடம், சுகாதார வளாகம் மற்றும் தியான மண்டபம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதில் மனநலம் பாதிக்கப்பட்டோர், நோய் வாய்ப்பட்டோர் தங்க இயலாது. முழு ஆரோக்கியத்துடனும், மனநலம் பாதிக்காக ஆதரவற்றோர் மட்டுமே இரவு நேரங்களில் தங்க முடியும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும், இதற்கென தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் இரவு நேர தங்கும் விடுதிகள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சியில் ஏற்கெனவே, ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே மற்றும் கோட்டை பகுதியில் கீழரண் சாலை, மதுரை சாலை உள்ளிட்ட இடங்களில் தலா 50 பேர் தங்கும் வகையில் விடுதிகள் உள்ளன. அவற்றை சில சமூக நல (என்ஜிஓ) அமைப்புகள் மாநகராட்சியோடு இணைந்து பராமரித்து வருகின்றன . இங்கு சிலர் நீண்டகாலமாக தங்கியிருப்பது குறித்த புகார்களைத் தொடர்ந்து, இரவு தங்குமிடங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்தி உள்ளது.

Comments are closed.