திருச்சியில் ஓய்வுபெற்ற என்எல்சி அதிகாரி, ரெயில்வே ஊழியர் வீடுகளில் 21 பவுன் நகைகள், பணம் திருட்டு…!
திருச்சி, ஏர்போர்ட் பகுதி, அன்பில் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்திரன் சண்முகம் (வயது 64). என்.எல்.சி.யில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் மர்ம ஆசாமிகள் வீட்டின் முன்பக்க கிரில் கேட் பூட்டை உடைத்ததுடன் பிரதான கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த நகை மற்றும் பணத்தை திருடி கொண்டு தப்பி சென்று விட்டனர். இந்நிலையில் சென்னையிலிருந்து வீடு திரும்பிய சந்திரன் சண்முகம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க செயின், நெக்லஸ், நாணயம், ஜிமிக்கி உள்ளிட்ட 19 பவுன் தங்க நகைகளையும், வெள்ளிப் பொருட்களையும், ரூ 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி கே.கே.நகர் ஐயப்பன் நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் ( 66). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். லட்சுமணன் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அறையின் கதவு மற்றும் பீரோவை உடைத்து அதிலிருந்த 2 பவுன் நகை மற்றும் 150 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஊர் திரும்பிய லட்சுமணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.