திருச்சியில் கோஷ்டி மோதலில் வாலிபர் படுகொலை – அரசு மருத்துவமனையிலும் மோதிக் கொண்டதால் பரபரப்பு…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, திருவளர்ச்சோலையை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 25). இவர், திருவானைக்காவல் – கல்லணை சாலையில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர், லால்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாகவும், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என அவரிடம் கேட்டுள்ளார்.
அப்போது நாகேந்திரனின் நெருங்கிய நண்பரான லால்குடி, வெள்ளனூரை சேர்ந்த ஜீவா ( 34) என்பவர், நாகேந்திரன் நல்லவர், அவரை திருமணம் செய்து கொள் என கல்லூரி மாணவியிடம் கூறியுள்ளார். அவர் கூறியதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்த அந்த இளம்பெண், அதனை தனது அண்ணன் விக்னேஷிடம் காண்பித்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரம் அடைந்த விக்னேஷ், நாகேந்திரனை கண்டித்ததுடன் ஜீவாவை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாகேந்திரன், ஜீவாவின் நண்பர்களான திருவளர்ச்சோலை கீழத் தெருவை சேர்ந்த நெப்போலியன், சங்கர், கதிரவன், கமலேஷ்
மற்றும் சிலரை அழைத்து கொண்டு விக்னேஷிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த விக்னேஷின் நண்பர்கள் நாகேந்திரன் தரப்பினரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக தெரிகிறது. இதில் நெப்போலியன் கொலை செய்யப்பட்டார். ஜீவா , நாகேந்திரன், கதிரவன், சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நெப்போலியன் தரப்பை சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். மேலும், நாகேந்திரனை பார்ப்பதற்காக அவரது சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களை கண்டதும் அங்கு கூடியிருந்த நெப்போலியன் தரப்பினர் ஆவேசமடைந்தனர். அந்த 2 வாலிபர்களையும் தாக்க முயன்றனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். சற்று நேரத்தில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மருத்துவமனை முன்பு நெப்போலியன் தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவது தொடர்பாகவும் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது . இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
**
Comments are closed.